பங்காளிங்க..

Thursday, March 8, 2018

அமைதி பூங்கா தமிழகம்-இபிஎஸ் காமெடி!காவல்துறையின்  மீது தொடர்ந்து அவப்பெயர்கள், அவ்வப்போது எப்போதாவது காவல்துறையின் சாதனைகள், எல்லாவற்றையும் தாண்டி, போக்குவரத்து காவல்துறையின் அடாவடி வசூல் வேட்டை என்று நாளுக்கு நாள் ஒவ்வொரு புகார்கள்.

திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளம் தம்பதியினரை காவல்துறை விரட்டி பிடித்து எட்டி உதைத்து கீழே தள்ளி அந்த பெண் மரணித்து போனாள், அப்பாவி பெண்மணி உஷா, வெட்கக்கேடான விஷயம் என்ன தெரியுமா? பெண்களை போற்றும் மகளிர் தினத்தினை நாளை கொண்டாடப்போகின்றோம். ஒரு விஷயம் எங்களுக்கு புரியவில்லை? அவர்கள் என்ன கொலைக்குற்றவாளிகளா? ஏன் விரட்டி பிடிக்க வேண்டும், வண்டி எண்ணை குறித்து வைத்து கொண்டு நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கலாமே! 

 அப்படி என்ன வசூல் வேட்டை வேண்டிக்கிடக்கிறது? இப்போது காவல்துறை ஆய்வாளர் காமராஜால் இறந்து போன சகோதரி உஷாவை, இன்னும் உலகத்தையே பார்க்காத அந்த சிசுவின் உயிரினை திருப்பி தர முடியுமா? தலைக்கவசம் அணியாததால் அவர்கள் அபராதம் கட்ட தயார், இறந்து போன உயிரை காவல்துறை திருப்பி தர முடியுமா?

இரண்டு விஷயங்கள் புலப்பட வில்லை. யாருக்காக இந்த வசூல் வேட்டை? இந்த வசூல் வேட்டையால் தமிழக நிதி சுமை குறைந்து விட போகின்றதா? தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது தவறுதான், அதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் சாலையின் குறுக்கே நுழைந்தோ அல்லது விரட்டி பிடித்தோ அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமா? அவ்வளவு ஒழுக்கமானவர்களா? அந்த ஒரு சில காவல்துறை அதிகாரிகள்?

நாளை இதற்கு அனைத்து ஊடகங்களும் விவாத களம். விவாத மேடை எல்லாம் வைப்பார்கள்? எங்கள் சகோதரி உஷாவை யார் திருப்பி தருவார்கள்? காவல்துறையிடம் பதில் இருக்கிறதா? நீதி கேட்டு போராடுகிறார்கள் இளைஞர்கள், பொதுமக்கள்.

இறந்து போனவளுக்காக கொஞ்சம் கூட வருந்தாமல், அந்த பொதுமக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த கருப்பு ஆடுகள், சமூக விரோதிகள் காவல்துறையின் மீது தாக்குதல் நடத்த, விளைவு தடியடி!

அமைதிப்பூங்காவாம் தமிழகம் முதல்வர் செய்தி வாசிக்கின்றார். வேடிக்கையாக இருக்கிறது?

சாலையின் குறுக்கே வண்டியை நிறுத்த கூடாது, வழிமறிக்க கூடாது என்று நீதிமன்றமும் உத்திரவு கொடுத்துள்ளதே! அந்த நீதியை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே, நீதியை, சட்டத்தை மீறி விட்டு பொதுமக்களை மட்டும் சட்டத்தை பின் பற்ற வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இன்றும் போக்குவரத்து துறை ஆய்வாளர்களுக்கு துணையாக ஹோம் கார்ட் என்ற போர்வையில் உள்ள இளைஞர்கள் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி, வாகனங்களுக்கு இடையே புகுந்து பயம் காட்டுவது, வாகன சாவிகளை பறிமுதல் செய்வது? எதற்கு இந்த அவசரத்தனம் என்று தெரியவில்லை.

வெளிப்படையாக சொல்லுங்கள் காவல்துறை அதிகாரிகளே, உங்களை கட்டாய வசூல் நடத்த சொல்வது யார்? யாருக்காக இந்த அதிரடி, அடாவடி வசூல் வேட்டை? சட்டம், ஒழுங்கை காப்பாற்ற துடிக்கிண்றீர்களா? மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துங்களேன், மதுக்கடைகளில் இருந்து குடித்து விட்டு வெளியே வந்து வாகனங்களை எடுக்கும் போதே பிடித்து விடலாமே? ஏன் அப்போது பிடிப்பதில்லை.

இன்று உசாவிற்கு நேர்ந்த கொடுமை நாளை உங்கள் வீடுகளிலும் நடக்கலாம். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் வேலை. செய்யுமா? உஷாவையும் அவரது வயிற்றில் வளர்ந்த பிள்ளையையும் கொன்ற காவல்துறை அதிகாரி காமராஜ் கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவரோடு பணியில் இருந்த அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்? நியாயம் வழங்க வேண்டும் அரசாங்கம், இதை செய்யுமா?

விசாரணை, வழக்கு என்று இழுத்தடித்து விட்டு வேறு ஊருக்கு மாற்றல் வழங்கி காப்பாற்றத்தான் துடிக்கும். இந்த காவல்துறை.

தமிழர்களின் அடையாளம்தான் பெரியார். அவரது சிலையை அவமானப்படுத்துகிறது ஒரு கூட்டம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது ஒரு கூட்டம். இரண்டையும் சண்டை மூட்டி தூண்டி விட்டு வசனங்கள் பேச வைத்து கல்லா காட்டுகிறது ஒரு கூட்டம்.

 நீங்கள் பேசியது தவறு என்று சுட்டிக்காட்ட கூட தைரியமில்லாத ஒரு முதலமைச்சர். துணை முதல்வர். இவர்கள் யாருக்கு பயப்படுகின்றார்கள், பல முதல்வர்கள் அரசியல் கட்சி தலைவர்களால் போற்றப்பட்டவர், பெரியார். அந்த பெரியாருக்கே ஒரு அவமானம். அதையும் ஏன் என்று கேட்க துணிவில்லாத ஒரு முதல்வர்.

ஹெச்.ராஜா ஒரு மாபெரும் இயக்கத்தின், கட்சியின் பிரதிநிதி. என்ன தைரியத்தில் அவர் இப்படி பேசுகின்றார்? தனக்கு எதுவும் தெரியாது, தன்னுடைய அட்மின் தான் இந்த காரியத்தை செய்தார் என்று சொல்கின்றார், அதையும் ஊடகங்கள் கேட்டுக்கொண்டு வருகின்றது. ஏன் இதை வாசித்தவுடனே தகவல் தெரிவிக்க வில்லை, டெல்லி சென்று விட்டு திரும்பிய பிறகு இந்த பதில்?

ஒரு மாபெரும் வன்முறையை தூண்டியவர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை, ராஜாவின் வலைப்பக்கத்தில் அவரது அனுமதி இல்லாமல் போட்ட அட்மின் அவர்களின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை, ஏன் ஊடகங்களும் அதை உடனடியாக கேட்கவில்லை?

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களிடம் காம்பிக்காமல் அவரே தகவல்களை வெளியிடும் உரிமையை அவருக்கு அளித்தது யார்? இப்படி பல, பல கேள்விகள்? உங்கள் பக்கத்தை மற்றொருவர் பயன்படுத்துகிறார், அந்த உரிமையை அவருக்கு வழங்கியது யார்? அவரின் பெயர் என்ன?

செய்வதையெல்லாம் செய்து விட்டு பழியை தூக்கி இன்னொருவர் மீது போடுவது, ராஜா மற்றும் பிஜேபியின் பயத்தை காட்டுகிறது. தவறு செய்த ராஜா மீது ஏன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா நடவடிக்கை எடுக்க வில்லை. வெறும் விளக்கம் மட்டும் கேட்டு விட்டு விட்டதாக சொல்வது கூட நம்பும்படியாக இல்லையே.

தமிழ்நாட்டில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்பது போன்ற மாய தோற்றத்தை முதல்வர் உருவாக்க முயற்சி செய்கிறாரா? 

முதல்வரின் தொடர் மவுனம் காரணம் என்ன? பாஜக வுக்கு பயப்படுகிறாரா? அம்மாவின் ஆன்மா இவர்களை மன்னிக்காது....