பங்காளிங்க..

Monday, May 30, 2011

சு.சாமியின் மனம் திறந்த பேட்டி

தேதி : - மே 30, 2011  
வணக்கம்,  
 
இது உங்கள் சு.சாமி, நான் பொதுவாய் வெளிப்படையாய் பேட்டிகள் கொடுப்பதில்லை, என்னை  மிகவும் வற்புறுத்தி கேட்பதால் என்   மனதில் தோன்றிய விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்...

இன்று இந்த கட்டுரையின் வாயிலாக உங்களை சந்தித்து பேசுவதில் எனக்கு பேரானந்தம்... நான் இப்போது சொல்ல போவதை நன்கு கவனியுங்கள்.....

நான் இதுவரை கண்டிராத ஒரு அதிசயம்....

இந்த மாளிகையை உருவாக்க என் தானயத் தலைவன் எத்தனை பாடு பட்டிருக்க வேண்டும்?...

இங்கே இருக்கும் ஒவ்வொரு அறையும் தனித்தனியே அமைந்திருந்தாலும் அது எத்தனை அழகாக உருவாக்கப்பட்டு உள்ளது தெரியுமா?.வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாளிகையை உருவாக்க எத்தனை ஊழியர்கள், எத்தனை நாட்கள் சிரத்தை எடுத்து இதனை செய்து முடித்திருப்பார்கள்...

அவர்கள் அனைவருக்கும் எனது கோடானு, கோடி நன்றியை அவர்களது பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன்....

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த மாளிகையை பார்க்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாளாவது தங்கி இருக்க வேண்டும்....  நான் அந்த மாளிகையில் இரண்டு முறை வெவ்வேறு அறைகளில் தங்கி இருக்கிறேன்.
 
அங்கே தங்குவதற்கு பணம் கிடையாது... ஏழைகளின் கோவில் அது என்றே சொல்லலாம், திருப்பதிக்கோ அல்லது தர்காவிற்கோ அல்லது வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதாக இருந்தால் கூட நீங்கள் சிறிது பணம் செலவழிக்க வேண்டும்...

இங்கே வருவதற்கு நீங்கள் சற்று உடல் உழைப்பை செலவழித்தாலே போதும், நீங்கள் இங்கே உடனடியாக வரலாம்....

இரவினில் இங்கே கிடைக்கும் ஒரு நிம்மதியான வாழ்க்கை, தூக்கம்,  அது எத்தனை கோடி கொடுத்தாலும் அங்கே உங்கள் வீடுகளில், சொகுசு பங்களாக்களில் இருக்காது....

மின்வெட்டு என்பது அறவே இல்லாத ஒரு வசந்த மாளிகை....கொள்ளையர்களின் அராஜகங்கள் அறவே கிடையாது....எல்லோரையும் சுட்டெரிக்கும் சூரியன் எங்களுக்கு குளுகுளுப்பாய் இருக்கும், எல்லோரையும் கடுமையாய் வாட்டும் குளிர் பனி, எங்களுக்கு தென்றலாய் சாமரம் வீசும்.

 தற்போது இங்கே மொத்தம் 530 அறைகள் இருக்கின்றது. இன்னமும் கட்டி கொண்டு பெரிதாக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்து அறைகளிலுமே மின்விசிறி, மற்றும் தொழைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றது. நீங்கள் ஆரம்பத்தில் ஒரு முக்கிய புள்ளியாகவோ, அல்லது ஒரு மகா பெரிய மேதையாகவோ இருந்திருந்தால் நீங்கள் மனம் வருத்தப்படக்கூடாது என்று உங்களுக்கு குளிர்சாதனப் பெட்டி கொண்ட அறையும் கொடுக்கின்றார்கள்...

ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியின் அடிப்படையில் அங்கே தங்கி கொள்ள அனுமதி உண்டு.

சைவம், அசைவம் என இரண்டுமே வழங்க படுகின்றது. ஐந்து நட்சத்திர விடுதியில் கிடைக்கும் தரத்தோடு உணவுகள் வழங்க படுகின்றது. முட்டை, சிக்கென், மட்டன் என்று வகை வகையாய் சமைத்து கொடுப்பார்கள்.

காரணம், ஒருவேளை நீங்கள் இடத்தை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் பல நேரத்தில் உங்களுக்கு சாப்பாடே கிடைக்காமல் போகும். அதற்காகவே உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகின்றது...

தயவு செய்து, வேலை இல்லாதோர், பெற்றவர்களை பிரிந்து தனியாக வாழ்பவர்கள், சாலையில் நடைபாதையில் படுத்து சிங்காரச் சென்னையை கெடுக்காமல், அழகாக இங்கே வந்து தங்கி கொள்ளலாம்.

அதற்கு நகரத்தில் ஆங்காங்கே இருக்கும் சிகப்பு கட்டிடத்தில் உங்களது பெயரையும், புகைப்படத்தையும் கொடுத்து பதிவு செய்தாலே போதுமானது.

ஒரு முறை இங்கே வந்து செல்பவர்களுக்கு திரும்ப திரும்ப வரத் தூண்டும்.

நான் இங்கே இரண்டு முறைதான் வந்திருக்கின்றேன், முதல் முறை வந்த போது  போதுமான வசதிகள் இல்லை. ஆனால் சமீபத்தில் நான் வந்த போது மிகவும் அற்புதமாய் இருந்தது, மனதிற்கு நிம்மதியாகவும் இருந்தது...

இங்கே இலவச தொழிற்கல்வி, சட்டக்கல்வி, சுயவேலை வாய்ப்பு திட்டம், கல்வித்திட்டம், என்று அனைத்து பிரிவுகளும் இருந்த இடத்திற்கே வந்து சொல்லி கொடுக்கின்றார்கள். நீங்கள் தொலைதூர கல்வி படிப்பதை காட்டிலும், இங்கே நீங்கள் 12.2 கிலோமீட்டர் தூரத்தில் அழகாக இருந்து படிக்கலாம்,. ஒரு பேனா வாங்க கூட நீங்கள் காசு செலவழிக்க வேண்டாம்...

நீங்கள் மற்ற இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு அரசாங்கம் அறிவிக்கும் இலவசங்கள் அவ்வளவு எளிதில் கைகளில் வந்து சேராது...குடும்ப அட்டை இல்லை, ஆண்டு வருமானம் சமர்பிக்கவில்லை என்றெல்லாம் சொல்லி அலைக்கழிப்பார்கள் அல்லது தட்டிக்கழிப்பார்கள்.அதுவே இந்த அரசு, மாளிகையில் இருப்பவர்களுக்கு அனைத்து சலுகைகளும் உங்கள் அறை தேடி வந்து சேரும் படி உதவிகள் செய்திருக்கின்றது ......

கடந்த ஆட்சியில் நகரத்திற்கு, நகர மக்களுக்கு  என்ன செய்தார்கள் என்பது முக்கியமல்ல,   எங்களை போன்றவர்கள் நிம்மதியாக உறங்க, சந்தோசமாய் உண்டு, சௌகரியமாய் வாழ அவர்கள் செய்த இந்த பேருதவியினை நாங்கள் எங்கள் ஆயுட்காலம் வரை மறக்க மாட்டோம்....

இங்கே நாங்கள் தனி தனி குடியிருப்புகளாய் வசித்தாலும்  எங்களுக்குள் ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் எதுவுமே கிடையாது, ஒரு அழகிய சமத்துவபுரம் அமைந்திருக்கின்றது. ஒருவரது பிரச்சினைகளில் மற்றவர்கள் பங்கு கொள்வோம், ஒருவரது சந்தோசங்களில் மற்றவர்களும் பகிர்ந்து கொள்வோம்...

எங்களது தகுதி அடிப்படியில் மட்டுமே நாங்கள் இங்கே தங்கவைக்கப் படுவோம், திடீரென்று எங்களை வெளியில் அனுப்பி விடுவார்கள், ஆனால் நாங்கள் நகரத்தில் இருந்து என்ன செய்ய முடியும்?? இதை போன்று ஒரு இடம், சாப்பாடு எங்களுக்கு வேறு எங்கே கிடைக்கும்?

கடந்த அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும், காரணம், ஒரு காலத்தில் அவர்களும், எங்களை போன்று கஷ்டபட்டவர்களாக இருந்திருக்க வேண்டும், அந்த கஷ்டம் எங்களுக்கும் வரக்கூடாது என்று எங்களுக்காகவே சிரத்தை எடுத்து செய்து முடித்திருக்கிறார்கள்....

இந்த கட்டுரை மூலமாக எனது சக நண்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்பது என்னவெனில் பொது மக்கள் போன்று அரசு சொத்துதானே என்று அசிங்கபடுத்துவது, சீரழிப்பது போன்று நாமும் நமது அறைகளை மாசு படுத்தக்கூடாது....

அவர்கள்தான் பொது இடங்களில் எச்சில் துப்புவதும், பான்பராக் மற்றும் வெற்றிலை போட்டு  முக்குக்கு முக்கு துப்பி வைப்பார்கள்...நாமும் அவ்வாறு நடந்து கொண்டால், பிறகு நமக்கும், அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.



அது போல பொது மக்களின் சொத்துக்களை எவ்வளவு வேண்டுமானாலும் சீரழித்து கொள்ளுங்கள், ஆனால் நமது பொருட்கள் எதிலும் ஒரு சின்ன கீறல் கூட இருக்க கூடாது.....

வெறும் 12.2 கிலோ மீட்டரில் தான் நாமும், பொது மக்களும் இருக்கின்றோம், நம்மை போன்ற ஏழை, மற்றும் சாமானியர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடம்.....அதை ஒரு கோவில் போன்று சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நகரம் மற்றும் தமிழகமெங்கும் சாலைகளும், பேருந்துகளும் கேவலமாய், பரிதாபமாய், நாறிப்போய் இருந்தாலும் கூட நமக்கு மிக அருமையான மண்டபத்தை கட்டி கொடுத்த அய்யாவிற்கு எங்களது நன்றியினை காணிக்கை ஆக்குகின்றோம்.....






கடந்த ஆட்சியில் நமக்காக ஒரு வசந்த மாளிகையை, சொர்க்க பூமியை கட்டி கொடுத்தார்கள். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது இதை விட அதிகமாக செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வோமாக....


அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் நான் இன்று இந்த புனிதமான மாளிகை மற்றும் இயக்கத்தின் சங்கத் தலைவராக பதவி ஏற்று இருக்கின்றேன்.... 

எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், 
இங்கு இல்லாத இல்லாத நிலை வேண்டும்....
அதற்கு முதற் கண் கலைஞர் தலைமையிலான கடந்த கால ஆட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்களை, நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.... 



நமக்கு இப்படி எல்லாம் வசதிகள் செய்து கொடுத்த அவருக்கு அவரது சொந்த மகளை அருகில் வைத்து பார்க்க முடியாமல் செய்த அமைப்புகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்....

நமது கலைஞர் தலைமையில் அடுத்த முறை பாரத பிரதமராக முயற்சி எடுப்போம்,. அப்போதுதான் நாம் இந்தியாவில் இருக்கும் அனைத்து வசந்த மாளிகைக்கும் மாற்றல் வாங்கி செல்ல முடியும். அதுபோல எல்லா அரசியல்வாதிகளும் சந்தோசமாய் வந்து செல்ல வசதியாக இருக்கும்.

உங்களுக்கு நேரம் கிடைச்சா நீங்களும் கண்டிப்பா நம்ம புழலுக்கு வந்திட்டு போங்க, எல்லோரும் பார்க்க வேண்டிய இடம் இதுதான்.....

இப்படிக்கு 
சுத்தியல் சாமி,
நிறுவனர் மற்றும் தலைவர் 
கொமுக -  (கொள்ளையர்கள் முன்னேற்ற கலக்கம் )
அறை எண்-23 . (A.C)
முதல் தளம்.
 புழல்;  




No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...