பங்காளிங்க..

Thursday, August 11, 2011

செத்துப்போன நீதியும், நீதிமன்றங்களும்

இவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் ஏன் தனிமனித சமுதாயத்திற்கு கிடைப்பதில்லை??? என்ற வினாக்களோடு இக்கட்டுரையை துவங்குகின்றேன்.....











சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றது என்பதை வெளியே பிணையில் வந்திருக்கும் பெரும் புள்ளிகளை வைத்து அழகாக கண்டுகொள்ளலாம்.

இன்று எத்தனை எத்தனை நில அபகரிப்பு புகார்கள், லஞ்ச ஊழல் வழக்குகள், அநேக குற்றவாளிகள் என்று குற்றம் சாத்தப்பட்டவர்கள் அனைவருமே முன்பிணை, சைடு பிணை, நிபந்தனை பிணை என்று பெற்று கொண்டு வெளியில் சுற்றி கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வெளியில் சுற்றும் போது குற்றம் சுமத்தியவர்கள் அல்லது புகார் தெரிவித்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு காவல்துறை வழங்குகின்றது. இதற்கு பயந்து போயே யாரும் புகார் கொடுப்பதில்லை.

நமது கண்ணுக்கு முன்னால் நடந்த அல்லது பத்திரிகைகள் அல்லது மீடியாகளின் முன்னால் நடந்த பல சம்பவங்கள் இன்றும் போதிய சாட்சியமின்றி விடுவிக்கப்படுகின்றார்கள். அப்படி எனில் அந்த மீடியாக்கள் அல்லது பத்திரிகைகள் எல்லாம் சாட்சிகள் இல்லையா? தினகரன் பத்திரிகை ஊழியர்கள் வினோத், கோபி, முத்துபாண்டி உயிரோடு எரிக்கப் பட்டார்கள்...ஆனால் இன்று வரை அந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. சம்பவம் நடந்த போது பல பத்திரிகைகள் நேரிடையாக ஒளிபரப்பு செய்தது. ஆனால் அவைகளை சாட்சியமாக ஏற்க எந்த நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் முயற்சி மேற்கொள்ளவில்லையே...அது ஏன் என்று புரியவில்லை.

ஒரு ஊழல் குற்றம் புரிந்தவர்களின் சொத்துக்கள் முதலில் முடக்கப்பட வேண்டும். ஏன் எனில் அந்த பிணை எடுக்கும் பணம் கூட அந்த ஊழலில் வாங்கிய பணமாக இருக்கலாம். மேலும் அந்த ஊழல் புரிபவர்களின் ஆண்டு வருமானத்தை முதலில் சோதனை செய்து அவர்களை மேலும் இயங்க விடாமல் தவிர்க்கலாம்.

கடந்த வருடம் ஒரு பெண் தாசில்தார் ரூவாய் 500 லஞ்ச பணம் பெற்றதாக கையும் களவுமாக பிடித்து அந்த பெண்ணை புழல் சிறையில் அடைத்ததாக செய்திகள் வந்தது. அந்த பெண் செய்தது தவறுதான். அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ஊழல் செய்த, லஞ்சம் பெற்றவர்கள் ஏன் இன்னமும் புழலுக்குள் செல்லாமல் இருக்கின்றார்கள். நீதியும், நீதிமன்றமும் எல்லோருக்கும் பொதுவானதே என்றே நான் நினைக்கின்றேன்.

இவ்வளவு ஏன் சர்வதேச அளவில் சானல் 4 ஒளிபரப்பு செய்த காணொளி ஒரு மிகப்பெரிய ஆதாரம்...அதையே இன்னமும் சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துகொண்டதாக தெரியவில்லை.

அந்த காணொளியை கண்டு அழுது, புலம்புவது நம் தமிழ் மாநில மக்கள் மட்டுமே..மற்றவர்கள் இன்னமும் செவி சாய்க்கவில்லை அல்லது கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை. எங்கோ சோமாலியாவில் நடக்கும் பட்டினி சாவுகளை கண்டு அழுது, வேதனை படும் நம் இந்திய மக்கள், இன்னமும் 35 கிலோமீட்டருக்கு அப்பால் செத்து போன நம் உறவுகளை கண்டுகொள்ளவில்லை.

அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நீதிமன்றம் செவி சாய்க்குமா? ஏழைகளுக்கு அது எப்போதுமே எட்டாக் கனிதானா? இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகள் என்றால் காது கொடுத்து கேட்கும் காவல்துறையும், நீதி துறையும் எப்படி சாமானிய மக்களின் லஞ்ச, ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள போகின்றது என்று தெரியவில்லை.

நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகளது வழக்கு எப்படி பேசப்பட்டது? நடிகர் சிங்கமுத்து, வடிவேலு வழக்கு எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டது? இத்தனைக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகளுக்கு சமரச பேச்சுவார்த்தைகள் கூட நடத்தப்பட்டதை நான் செய்திதாள்களில் படித்திருக்கின்றேன். அவன் நடிகனாக இருந்தால் என்ன? தவறு செய்தால் கைது செய்து விசாரிக்க வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு அங்கே மட்டும் சமரச பேச்சுவார்த்தை எல்லாம் எதற்கு? சோனியா அகர்வால், செல்வராகவன் விவாகரத்து வழக்கு, நயன்தாரா, பிரபு தேவா வழக்கு, ஹரிஷ் ராகவேந்திரன் விவாகரத்து வழக்கு, பிரசாந்த விவாகரத்து வழக்கு இவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நீதித்துறை, ஏன் இந்த சாமானிய மக்களின் வழக்குகள் என்றால் அலைக்கழிக்கப்படுகின்றார்கள் என்று தெரியவில்லை. எத்தனை எத்தனை குடும்ப நல வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் தேக்கம் அடைந்திருக்கிறது என்பதை கோப்புகளை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இன்று சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் எத்தனை எத்தனை குடும்ப பெண்கள் கைக்குழந்தைகளோடு வருடக்கணக்கில் காத்திருக்கின்றார்கள் என்று தெரியுமா?

ஏன் இந்த பாகுபாடு....சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பாடப்புத்தகத்தினிலும், படங்களிலும் மட்டுமே கேள்விபட்டிருக்கின்றேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்கின்ற போது நீதிமன்றமும், காவல்துறையும் நம்பகத்தன்மையை இழக்கின்றது.

சட்டம் கடுமை என்றால் அது எல்லோருக்கும் பொதுவானதாய் இருக்க வேண்டும்....சட்டம் பண்புள்ளது என்றால் அது எல்லோருக்கும் பண்புள்ளதாய் இருத்தல் அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

வங்கியில் ஏழை கடன் பெற்றால் ஆயிரத்தெட்டு கேள்விகளை கேக்கும் இந்த சட்டம், ஒரு நடிகனுக்கோ அல்லது நடிக்கைக்கோ அல்லது அரசியல் பெரும்புள்ளிகளுக்கோ சிவப்பு கம்பளம் விரித்து வாரி வாரி கொடுக்கின்றது. பின்னர் அவன் கம்பி நீட்டி விடுகின்றான். அதன் பிறகு காசோலை மோசடி என்று பின்னாளில் புகார் தெரிவிக்கின்றது. ஏன் இந்த மாறுபாடுகள்? குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தவில்லையா? உடனடியாக நாளிதழில் அட்டை செய்தி வெளியிடு, அதன் பிறகு எவனாவது அந்த தவறை செய்வானா?

அதுபோல ஒரு வழக்கிற்கு 3 முறைக்கு மேல் வாய்தா கொடுக்க கூடாது என்று கடுமையான சட்டம் வர வேண்டும். அப்படி நடந்தால் இன்று லட்சக்கணக்கான வழக்குகள் முடிந்திருக்கும்...எத்தனையோ நிரபராதிகளுக்கு நியாயம் கிடைத்திருக்கும்...எத்தனையோ நியாயமான குடும்ப பெண்களுக்கு நீதியும், விவாகரத்தும் கிடைத்திருக்கும்..

8 comments:

  1. All are equal but some are more equal than others! :)

    ReplyDelete
  2. குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தவில்லையா? உடனடியாக நாளிதழில் அட்டை செய்தி வெளியிடு, அதன் பிறகு எவனாவது அந்த தவறை செய்வானா?

    அருமை.

    ReplyDelete
  3. ///சி.பி.செந்தில்குமார் said...

    நல்லாருக்கு மேட்டர் ///

    எப்பவுமே மேட்டரு நல்லா இருக்கும், ஆனா நடைமுறைக்கு ஒவ்வாது..

    ReplyDelete
  4. /// ரியாஸ் அஹமது said...

    good post again ///

    ஒவ்வொரு முறையும் எனது பதிவு சிறப்படைய காரணம் உங்களது ஒத்துழைப்பும், பேராதரவுமே என்று நான் நினைக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  5. ///Robin said...

    All are equal but some are more equal than others! :)///

    சமம் என்பதற்கும் அடுத்து மேலும் சமம் என்ற வார்த்தை இருப்பதை உங்கள் மூலமாய் நானும் உணருகின்றேன்...

    ReplyDelete
  6. /// Rathnavel said...
    அருமை. ///



    பதிவிற்கு நன்றி

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...