பங்காளிங்க..

Wednesday, November 9, 2011

அமைச்சரை மாத்து, இல்லேனா பில்டிங்க மாத்து?

மழை

தமிழகம் முழுவதும் பரவலாக பருவ மழை பெய்து விவசாயிகள் நெஞ்சில் பாலை வார்த்து இருக்கின்றது. வழக்கம் போல் எதிர்கட்சிகள், ஆளும்கட்சி பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

சரி தற்போதைய ஆளும்கட்சி எதுவும் செய்யவில்லை...ஆனால் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் என்ன என்ன செய்தீர்கள்? நீங்கள் தரமான சாலைகள் அமைத்து இருந்தால் தற்போது சாலைகள் இந்த அளவிற்கு மேடு, பள்ளங்கள் ஆகி இருக்காதே..இப்படியே குறை சொல்லி ஐந்து வருடத்தை கழித்துவிடலாம் என்பது எதிர்கட்சிகளின் எண்ணம் போலும்.எங்களது வசிப்பிடம் அருகினில் சாலைகளில் பெரிய பள்ளம் விழுந்து ஒரு மிகப்பெரிய பேருந்தே அந்த பள்ளத்திற்குள் மூழ்கி விடும் அபாயத்தில் இருக்கின்றது. இது யார் காலத்தில் போடப்பட்டது? அதை அன்றே சரி செய்திருந்தால் இந்த நிலைமை மக்களுக்கு வந்திருக்காதே? ௫ ஆண்டுகளில் உன்னால் சாதிக்க முடியாததை ௫ மாதத்தில் எப்படி சாதித்து விட முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் ஸ்டாலின். ஆனால் எந்த ஒரு பாதாள சாக்கடை திட்டமும் வெற்றி பெறவில்லையே. கடந்த முறை பெய்த மழையை விட தற்போது மிக குறைந்த அளவுதான் பெய்திருக்கின்றது. எங்கெல்லாம் பாதாள சாக்கடை போடப்பட்டதோ அங்கெல்லாம் தற்போது முன்பை விட அதிக அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதற்க்கு ஒப்பந்தம் போட்ட காண்டிராக்டரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை யாரும் இப்படி மோசமான சாலைகளை, பாதாள சாக்கடை திட்டத்தை போட வரமாட்டார்கள். 

தற்போதைய ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தது மே 20 .  அதன் பிறகு தலைமை செயலகத்தை மாற்றவும், நில அபகரிப்பு  வழக்குகளை பதிவு செய்து விசாரிப்பதற்குள் உள்ளாட்சி தேர்தல் வந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் வந்தால் ஆளும்கட்சி எந்தவித உதவிகளும் (பொதுமக்களுக்கு) செய்யக்கூடாது என்பது விதி. (எப்போதுமே செய்யப்போவதில்லை) இருந்தாலும் அதன் பிறகு மழை குறுக்கிட்டு விட்டது. இனிமேல் மழை முடிந்தால் தான் எதையுமே செய்ய முடியும்.

இந்த ஆறு மாதங்களில் அதிமுக கட்சி மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்று சொல்லும் திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு தரமான சாலைகள், பேருந்து நிலையங்கள், பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாமே. அப்போதெல்லாம் எங்கே சென்று இருந்தார்கள் இவர்கள்?

மக்களின் வரிப்பணத்தை வீணாக்க ஆங்காங்கே பூங்காக்கள் நிறுவப்பட்டன. பூங்காக்கள் நல்ல விசயம்தானே...அதை எப்படி குறை சொல்லலாம் என்று குமுறும் மக்களுக்கு ஒரு அன்பான பதில். பூங்காக்கள் அமைக்கும் திட்டத்திற்கு முன்பே மெட்ரோ ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்தெந்த இடங்கள் என்றும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

அந்த விஷயம் நன்கு தெரிந்தே மக்கள் பணத்தை வீணடித்திருக்கின்றார்கள்  . காரணம் சென்னையில் மட்டும் ஏழு பூங்காக்கள் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. நானும் அதை செய்தேன், இதை செய்தேன் என்று வீண் ஜம்பம் தேவை இல்லையே. எத்தனையோ சாலைகளை நவீன வசதிகளோடு மேம்படுத்தி இருக்கலாம். எதையுமே செய்யாமல் இந்த ஆறு மாதத்தில் நீ என்ன செய்தாய் என்று கேள்வி கேட்பது நியாயமானதாக இருக்காது.

பொதுவாய் அரசு ஊழியர்கள் கருணாநிதி என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். காரணம் என்ன? அரசு ஊழியர்கள் சங்கங்கள் அமைக்கலாம், போராட்டம் செய்யலாம், 8 மணிநேரம்தான் வேலை, அது செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம், கேட்காமலே போனஸ், கேட்காமலே ஊதிய உயர்வு என்று அறிவித்து அவர்களின் வாக்குகளை எப்போதுமே தன் வசம் மேற்கொண்டு விட்டார். சரி 8 மணி நேரம் அவர்கள் உருப்படியாக வேலை செய்கின்றார்கள் என்றால் அதுவும் கிடையாது. அப்படி எனில் ஏன் இத்தனை கோப்புகள் கிடப்பினில் இருக்கின்றது. ஒரு நுகர்பொருள் வாணிபக் கழகம் அல்லது போக்குவரத்து துறை என்று எந்த ஒரு அரசாங்க பணியாக இருக்கட்டும்...எல்லாமே காலந்தாழ்த்தியே செய்து முடிக்கப்படுகின்றது. இதுவே ஒரு தனியார் வசம் செல்லும்போது அந்த வேலையை முடித்தால்தான் உனக்கு ஊதியம், ஊதிய உயர்வு என்று சொல்லும்போது அவர்களிடம் முறையான பலன் கிடைக்கின்றது.நெல்லை போன்ற நகரங்களில் ஒரு அரசுப் பேருந்து, ஒரு தனியார் பேருந்து என்று எடுத்து கொள்ளுங்கள். தனியார் பேருந்து ஒரு நாள் மட்டும் 850 முதல் 1500 வரை சம்பாதிக்கின்றார்கள். அதுவே அரசு பேருந்து என்பது 350 முதல் 600 வரை மட்டுமே வசூலிக்கின்றார்கள். அரசுப் பேருந்தின் முகப்பினில் பயணிகளின் நண்பன் என்று போட்டுக்கொள்ள வேண்டியது. ஆனால் எந்த ஒரு நிறுத்தத்திலும் பேருந்தை நிறுத்துவதே கிடையாது. அதுவே தனியார் பேருந்துகள் பயணிகளின் நண்பனை போல எல்லா நிறுத்தம், மற்றும் பயணிகள் கைகாட்டும் இடமெல்லாம் நிறுத்தி ஏற்றி இறக்கி செல்கின்றார்கள். தானாகவே வருமானமும் பெருகுகின்றது. அப்படி உழைத்தால் அன்றைய தினம் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கூடுதல் படி கொடுக்கின்றார்கள். நீ ஓட்டு, ஓட்டாமல் போனாலும் உனக்கு சம்பளம் என்று சொல்வதால் தானே இவ்வளவு பிரச்சினை. ஒருநாளைக்கு இத்தனை ட்ரிப் அடிக்க வேண்டும் என்று மட்டுமே உத்திரவு வந்துள்ளது. அதனால் அவர்கள் 8 முதல் 10 ட்ரிப் வரை காலியாகவே அடித்து விட்டு டீசலையும் காலி செய்து விட்டு இறங்கி சென்று விடுகின்றார்கள்.

எத்தனை முறை, திரு.கருணாநிதியோ அல்லது அவரது குடும்பத்தாரோ அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார்கள். அவர்கள் அரசின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? ஏன் தனியார் சிகிச்சை மையம் செல்ல வேண்டும், ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் கருணாநிதி குடும்பத்தார் ஏன் தமிழகத்திற்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டிக் கொடுத்து அதில் ஏழைகள் நல்வாழ்வு வாழ வழி செய்திருக்க கூடாது?

ஒரு அரசுப் பேருந்தில் திருச்சி வரை சென்றேன்..பின்னர் திரும்பி வரும்போது ஒரு தனியார் பேருந்தில் வந்தேன். அரசுப் பேருந்தில் பயணிகளின் இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்திருந்தால். கிழிந்திருந்தால் பரவாயில்லை. ஓட்டுனர், நடத்துனரின் இருக்கைகள் கிழிந்திருக்கின்றது, பல ஓட்டுனர்களின் இருக்கைகளின் கீழ் செங்கல்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. ஏன் இந்த அவலம்? ஓட்டுனர் இருக்கை உனது இடம், இதில் எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்க்கு நீதான் பொறுப்பு, உனது சம்பளத்தில் பிடிப்பேன் என்று சொன்னால் அதன் பிறகு அந்த பேருந்து எப்படி இருக்கும். அதை யாரும் செய்வதில்லை. அதை விடுத்து கேட்காமலே போனஸ், ஊதிய உயர்வு என்று கொடுத்தால் அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள். இதை விட பல கொடுமைகள், நிறைய பேருந்துகளில் மூட்டை பூச்சி தொல்லை வேறு. ஏன் என்று கேட்டால் வேறு மாற்று பேருந்து இல்லை, இன்னும் கொஞ்ச தூரம்தான், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று சொல்வது...இல்லாவிட்டால் இஷ்டம் இருந்தால் ஏறுங்க, இல்லேனா பிரைவேட் பஸ்சுல போக வேண்டியதுதானே என்று எகத்தாளமாய் பேசுவது...அதையும் மீறி சொன்னால் முடிஞ்சா போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க சார் என்று பேசுவது.ஏதாவது வாக்குவாதம் முற்றிப் போய் கைகலப்பு உண்டானால் உடனே மொத்த அரசுப் பேருந்துகளையும் வழிமறித்து போராட்டம் பண்ணுவது, என்று ஒவ்வொரு ஆட்சியிலும் இது வாடிக்கையாகி விட்டது. 

நிறைய இடங்களில் வேறு பேருந்தை எடுத்து கொண்டு வருகின்றோம் என்று சொல்லி விட்டு பொது மக்களை நடுரோட்டில், நடுகாட்டில், நடு இரவில் இறக்கி விட்ட பரிதாப கதைகளும் இருக்கின்றது. எப்படித்தான் அவர்களுக்கு இதை செய்ய மனது வருகின்றது என்று தெரியவில்லை.


சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு செய்தி கேட்டேன். அதாவது சென்னையில் நிழற்குடைகளே இல்லாமல் பொதுமக்கள் அவதி படுகின்றனர். அதிமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்றது என்று சொன்னார்கள். உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரிக்க வேண்டிய காமெடி செய்தி அது. அந்த பேருந்து நிறுத்தங்களை எல்லாம் இடித்து தள்ளியதே கலைஞரின் பொன்னான ஆட்சியில்தான். சுட்டெரிக்கும் கடுமையான கோடைகாலத்தில் அனைத்து நிழற்குடைகளையும் இடித்து விட்டு மாற்று ஏற்பாடு கூட இல்லாமல் செய்தவர்கள் அவர்கள்தான். மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் என்று நினைக்கின்றார்கள் போலும்...அல்லது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகின்றார்கள் போலும்.

தரமான? தாழ்தள சொகுசு பேருந்துகள்.

அடுத்த அவலமான விஷயம் என்பது தாழ்தள சொகுசு பேருந்துகள்...அனைத்துமே பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது, தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள்...சுற்றிலும் கண்ணாடி போடப்பட்ட பேருந்துகள், வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பாதிப்பு என்னவோ உள்ளிருக்கும் பயணிகளுக்குத்தான்...பற்றாக்குறைக்கு கண்ணாடியை சுற்றிலும் விளம்பர ஸ்டிக்கர்கள். உள்ளே ஏறிய பயணிக்கு தான் இறங்கும் இடம் வந்து விட்டதா, இல்லையா என்று கூட தெரியாது. முன்காலத்தில் இருந்த பேருந்துகளில் விசாலமான இருக்கைகள், பயணிகள் நிற்பதற்கு ஏதுவாக வசதிகள், காற்றோட்டமான சாளரங்கள் மிக குறைந்த விலையிலேயே தரமானதாய் ஓடி கொண்டிருந்தன. தற்போதைய தாழ்தள பேருந்துகளில் தானியங்கி கதவுகளைத் தவிர வேறு எந்த வசதியும் கிடையாது. இருக்கைகள் கூட வெறும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஒவ்வொரு நாளும் நரக வேதனைகளை அனுபவித்து கொண்டுதான் பயணிகள் சென்று வருகின்றார்கள்.

எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் கருணாநிதி இந்த போக்குவரத்து துறை நட்டத்தை மட்டும் ஒப்பிட்டு பேச மறுக்கின்றார் அல்லது மறைக்கின்றார். அதாவது 5000 பேருந்துகளை இயக்கி லாபத்தில் கொண்டு வந்தாராம் செயலலிதா...அந்த லாபத்தை கொண்டு 15000 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை வாங்கினாராம் கருணாநிதி. ஆனால் திமுக காலத்தில் 15000 புதிய பேருந்துகளை இரட்டிப்பு மடங்கு கட்டணத்தில் ஓட்டியும் இறுதியில் ஆட்சி முடியும் தருவாயில் நட்டத்தில் இயங்கியதாக கணக்கு காட்டி இருக்கின்றார். 

இதில் சம்பந்தப்பட்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரை அழைத்து முதலில் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் மக்களுக்கு புரியும். எங்களுடைய வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப் பட்டிருக்கின்றது. இப்படி எல்லாத் துறைகளிலும் ஐந்து வருடங்கள் சீரழித்து விட்டு தற்போது நீ ஐந்து மாதத்தில் எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு உகந்தது அல்ல என்பதே என் கருத்து.

அதைவிட முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம்...கருணாநிதி அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு செய்தும் கடைசியில் எதிர்க்கட்சி வரிசையில் கூட உட்கார முடியாத வண்ணம் அவர்களை வீட்டுக்கு அனுப்பியதும் இதே அரசு ஊழியர்கள்தான். பெண்களுக்காக நாங்கள் மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி கொடுத்தோம் என்று பெருமை பேசிய திமுக விற்கு அந்த பெண்கள் ஓட்டும் விழாததும் ஆச்சரியமான விசயமே.

அண்ணா நூலகம்

முதலில் சட்டசபையை மாற்றி அமைத்த செயலலிதா தற்போது நூலகத்தையும் மாற்றி அமைத்து இருக்கின்றார். கல்விக் கடவுள் சரஸ்வதியின் அவதாரமாய் கருதப்படும் நூலகம் இந்த திசையில் இருந்தால் ஆபத்து என்பதால் என்னவோ வேறு திசைக்கு மாற்றி இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு வருகின்றது. ஒரு மிகப்பெரிய ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் ஒன்றை இடம் மாற்றி அந்த பெயரை அழிக்க வேண்டும் என்று நினைப்பது சற்று அவசரகுடுக்கைத்தனமே. அதை விட பெரிய வருத்தம் அந்த இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற போகின்றோம் என்று சொல்லி இருக்கின்றார், குழந்தைகள் நல மருத்துவமனை மிக அவசியமான ஒன்றே. ஆனால் வேறு ஒரு இடத்தில் அந்த மருத்துவமனையை கட்டி ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் மருத்துவமனை இது என்ற பெருமையை புதிதாய் கட்டி உருவாக்கலாம்.

ஏற்கனவே கட்டியதை மாற்றம் செய்வதை விட புதிதாய் அதை விட குறைந்த விலையில் கட்டி முடிக்கலாம். நூலகத்திற்கென்று இருக்கும் தளங்களை மருத்துவமனை அறைகளாக மாற்றுவது என்பது கூடுதல் செலவுகளைத்தான் உருவாக்கும். இது தேவையற்ற ஒன்றுதான். இன்னமும் அந்த அம்மா திருந்தவே இல்லை என்பதையே இது காட்டுகின்றது.

இன்னும் என்னென்ன வற்றை மாற்றப் போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. வக்கீல்களுக்கு நன்றாக பொழுது போய் விடும். காரணம் இந்த அம்மா போடும் திட்டத்திற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டே, போராடி கொண்டே இருக்கலாம். வழக்குகளை புறக்கணிக்கலாம். நீதிமன்றங்களையும் புறக்கணிக்கலாம். அந்த அம்மாவும் புதிது புதிதாய் திட்டங்களை அறிவிக்கும், ரத்து செய்யும்...நல்ல வேடிக்கைதான் அவர்களுக்கு, மோசமான நேரம்தான் வாக்களித்த பொதுமக்களுக்கு எல்லா காலகட்டத்திலும்?

5 comments:

  1. மிகவும் எதார்த்தமான உண்மை. நீங்கள் சொன்ன அந்த அரசுப் பேருந்து வேதனைகளை நான் பலதடவை சந்தித்து இருக்கின்றேன். மிகப்பெரிய கட்டுரை.ஆனால் அத்தனையுமே உண்மை. பொறுமையாய் படிப்பவர்கள் நிச்சயம் அந்த வேதனைகளை உணருவார்கள்.அருமை. வாழ்த்துக்கள். நன்றியுடன் - முனைவர். ஞானசேகரன்

    ReplyDelete
  2. குறை சொல்லியே காலத்தை தள்ளுபவர்கள் முந்தைய காலத்தில் நாம் மட்டும் என்னத்த கிழிச்சுட்டோம்னு நெனச்சு பாக்குறதில்ல.. இப்படியே கொற சொல்லி கொற சொல்லி நாசமா போக வேண்டியது தான். எவனும் மக்களுக்கு உருப்படியான சேவை செய்யணும்னு வரமாதிரி தெரியல. கொடுக்குற சேவையையும் குறை சொல்வது. அல்லது கிடைக்க விடாமல் தடுப்பது. இப்படி தான் அரசியல் வாதிகள் காலம் ஓட்டுறாங்க.

    நல்லபதிவு சகோ

    பாதிபாதியா பிரிச்சு தனி தனி தலைப்புகளி போட்டிருக்கலாமே :-)

    வாழ்த்துக்கள்
    தொடருங்கள்!!!

    ReplyDelete
  3. /// ஆமினா said...

    குறை சொல்லியே காலத்தை தள்ளுபவர்கள் முந்தைய காலத்தில் நாம் மட்டும் என்னத்த கிழிச்சுட்டோம்னு நெனச்சு பாக்குறதில்ல.. இப்படியே கொற சொல்லி கொற சொல்லி நாசமா போக வேண்டியது தான். எவனும் மக்களுக்கு உருப்படியான சேவை செய்யணும்னு வரமாதிரி தெரியல. கொடுக்குற சேவையையும் குறை சொல்வது. அல்லது கிடைக்க விடாமல் தடுப்பது. இப்படி தான் அரசியல் வாதிகள் காலம் ஓட்டுறாங்க.

    நல்லபதிவு சகோ

    பாதிபாதியா பிரிச்சு தனி தனி தலைப்புகளி போட்டிருக்கலாமே :-)

    வாழ்த்துக்கள்
    தொடருங்கள்!!! ///


    நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி...

    அனைத்தையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரே பதிவை எழுதிவிட்டேன்..

    நிச்சயம் அடுத்த முறை திருத்தி கொள்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  4. நிறைய எழுதி இருக்கீங்க...நம்மால முடியாது...
    பொறுமையா வாசிச்சேன்...கொட்டித்தீர்த்துள்ளீர்கள்...

    அவர்கள் காதில் விழட்டும்...

    ReplyDelete
  5. முத நாலு பத்திகளை பத்திரமா வச்சிருங்க, அடுத்த வருஷம் மீள் பதிவா போடலாம்..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...