பங்காளிங்க..

Wednesday, July 10, 2013

முதல் ஆளாய்.....

ஜூனில் பள்ளி திறந்ததும் 
பெஞ்சு, டெஸ்க்கை நிரப்புவோம் 
முதல் ஆளாய்;

புத்தகக் கடையினில் 
போட்டி போட்டு வாங்கி அதில் வாசம் தேடுவோம் 
முதல் ஆளாய்;

பிரவுன் கலர் அட்டைப் போட்டு 
கிரிக்கெட் வீரர் படம் போட்டு லேபிள் ஓட்டுவோம் 
முதல் ஆளாய்;

வாரத்தில் இரண்டு ஞாயிறு தேடி 
திங்கள் காலையில் தெய்வத்தை தேடுவோம் 
முதல் ஆளாய்;

சிலேட் குச்சி, நடராஜ் பென்சில், மை பேனா,
பால் பாயிண்ட் பேனா, வாங்கினோம் 
முதல் ஆளாய்;

வாய்ப்பாடு புத்தகம், லாக் புக், 
அப்புறமா கால்குலேடர்  
இரவல் வாங்கிப் படித்தோம் 
முதல் ஆளாய்;

வகுப்பறையில் ஓடியாடி, பெஞ்சுமீது 
ஏறி இறங்கி வகுப்பில் சட்டை நனைந்து அமர்ந்தோம் 
முதல் ஆளாய்;

சாப்பாட்டை பெஞ்சிலும், மரத்தடியிலும்,
மைதானத்திலும், சில சமயம் சைக்கிள் செட்டிலும் உண்டோம் 
முதல் ஆளாய்;

சரியா படிக்கலைனா முழங்காலிட்டு,  
சந்தோசமாய் தண்டனை அனுபவிப்போம் 
முதல் ஆளாய்;

வாரத்தில் ஒருநாள் வரும் பி.டி வகுப்புக்கு 
வழிமீது விழி வைத்து காத்திருப்போம் 
முதல் ஆளாய்;

பரீட்சை அட்டையை மட்டையாக 
பேப்பர், சாக்ஸை பந்தாக வைத்து கிரிகெட் ஆடுவோம் 
முதல் ஆளாய்;

உச்சி வெயிலில் கபடி, கோ-கோ என்று 
வியர்வையில் குளித்தாடுவோம் 
முதல் ஆளாய்;

அடைமழை பெய்தாலும் புத்தக 
கிரிக்கெட் விளையாடுவோம்   
முதல் ஆளாய்;

பள்ளி விட்டதும் வெளியே பைகளை 
தூக்கி பறந்து செல்வோம்  
முதல் ஆளாய்;

நெல்லிக்காயா, இலந்தன்பழமா, நவாப் பழமா?
பத்து பைசாவில் பகிர்ந்து உண்போம் 
முதல் ஆளாய்; 

குல்பி ஐசோ, பிக் பன்னோ, நன்னாரி சர்பத்தோ 
பிடுங்கித் தின்போம்   
முதல் ஆளாய்;

காலாண்டு, அரையாண்டு, முழுவாண்டில் 
விழுந்து விழுந்து படிப்போம் 
முதல் ஆளாய்;

பரீட்சை டைம் டேபிளில் 
லீவு எத்தனை நாள் என்று தேடித் பிடிப்போம் 
முதல் ஆளாய்;
நாமும் 
படித்தோம் 
விளையாடினோம் 
அழுதோம் 
சிரித்தோம் 
வெற்றி கண்டோம், 
தோல்வி பெற்றோம் 
எத்தனை எத்தனை சந்தோசங்கள், 
எத்தனை எத்தனை துக்கங்கள் 
பால்ய கால  சண்டைகள் 
அத்தனையும் மறந்து போனதே இன்று ?

தோளில் கைபோட்டு சுற்றிய காலம் எங்கே?
செல்போன். எஸ்.எம்.எஸ், சில் தொலைந்து போனோம் இங்கே!

மரத்தடியில் சிரித்துப் பேசிய வசந்தம் எங்கே?
வெப்சைட்டில் மறைத்து பேசும் சாட் இங்கே?

கனத்து போன இதயங்களோடு 
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் 
முதல் ஆளாய்;
இன்று நம் புது உலகோடு, உறவுகளோடு!

Saturday, July 6, 2013

இன்று இளவரசன்??? நாளை??

இளவரசன், திவ்யா காதல் ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு....காதல் பறவையில் ஒன்றை கொன்று விட்டோம்...இனிமேல் திவ்யா வின் வாழ்க்கை???

இளவரசன், திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.....அதுவும் பலவிதமான போராட்டத்தோடு...திருமணம் வெற்றி கண்டு எட்டு மாத வாழ்க்கையையும் ருசி கண்டாகி விட்டது.

மகள் வேறு சாதி பையனை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத தந்தை தற்கொலையும் செய்து கொண்டு விட்டார்.   தனது காதல் கணவனை விட்டு விலகாத திவ்யா தற்போது இளவரசன் வேண்டாம் என்று சொல்ல இளவரசனின் மரணம் தற்போது நிகழ்ந்து உள்ளது.

இது கொலையா? தற்கொலையா? இதன் விபரம் எல்லாமே திவ்யா விற்கு மட்டுமே தெரியும்! 
அவள் வாய் திறந்து உண்மையை சொன்னால் மட்டுமே இளவரசனின் உண்மையான காதலின் அர்த்தம் உலகிற்கு புரியும்?

அவளாகவே விருப்பப்பட்டுத்தான் போராடித்தான் இந்த திருமணம் செய்து கொண்டாள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கணவரை விட்டுப் பிரியாதவள் இன்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தின் படி எனக்கு கணவரோடு வாழ விருப்பமில்லை, அம்மாவோடு வாழ விரும்புகின்றேன் என்று சொல்ல காரணம் என்ன?    இடையினில் நடந்தது என்ன?

யார் அவளை அப்படி பேசுமாறு நிர்பந்தித்தது? காதல் என்பது அவ்வளவு பாவமா? இன்று அம்மாவோடு போக வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு தன்னால் தனது கணவனின் வாழ்க்கைக்கு, உயிருக்கு ஆபத்து என்று தெரியவில்லையா அவளுக்கு? 

இதே திவ்யா அன்று நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவளை கணவரும் அவரது அம்மாவும் மிக நன்றாக பார்த்துக் கொள்கின்றார்கள் என்று சொன்னவள், அதன் பின்னர் எந்த பிரச்சினையிலும் நான் கணவரை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவள் இன்று திடீரென்று அம்மா தனிமையில் இருக்கின்றார்கள், அதனால் நான் அம்மாவோடு வாழப் போகின்றேன் என்று பேசுவதற்கு, அந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? இதைத்தான் அந்த திவ்யாவின் அம்மாவும் ஆசைப் பட்டார்களா? மகள் விதவையாய் வாழ்வதை எந்த தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அதுவும் இந்த சமுதாயத்தில் நடந்தேறி விட்டது...

இப்போதாவது திவ்யா வாய் திறந்து நடந்தது என்ன என்பதை சொன்னால்தான் இன்னும் பல சாவுகள், சாதி மோதல்கள் நடக்காமல் இருக்கும்.....அவள் காதல் உண்மை என்றால் அவள் வாய் திறப்பது மிக முக்கியம்....

சொல்லப் போனால் அவளது உயிருக்கும் இனி ஆபத்தே...எங்கே அவள் வாய் திறந்தால் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என்று அவளையும் அழிக்கத் தயங்க மாட்டார்கள் அந்த சாதி வெறி பிடித்த முதலைகள்....இனி காதல் வேண்டாம் என்று சொல்லவேண்டுமா? அல்லது சாதி பார்த்து காதலியுங்கள் என்று சொல்ல வேண்டுமா? அப்படி சொன்னால் அதற்க்கு பெயர் உண்மையான காதல்தானா? 

இரண்டு உயிர்களுக்கு உரிய காதல் பிரச்சினை, இரண்டு குடும்பங்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தாண்டி இரண்டு ஊர்கள், இரண்டு பிரிவு மக்கள் என்று பலதரப்பட்ட மக்களை தாண்டி இன்று ஒரு உயிரை காவு வாங்கி இருக்கின்றது...இதற்க்கு காரணம் யார்? 

விடைகளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்......வினாக்கள் மட்டுமே பல உருவாகின்றன!