பங்காளிங்க..

Thursday, January 29, 2015

திரு.சகாயத்துக்கு ஓர் எச்சரிக்கை!!!!

திரு. உ.சகாயம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தந்தை பெயர் திரு.உபகாரம் பிள்ளை. அவர் தமிழகத்திற்கு தந்த மிகப் பெரிய உபகாரம் திரு. சகாயம். அவர்கள். 

தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் தனது பணியை சிறப்பாக செய்து முடிக்கின்றார். தற்போது கனிம வள ஊழலைப் பற்றிய கணக்கெடுப்பினில் பணியாற்றி வருகின்றார். மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயம். தவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் பதுங்கியும், தலைமறைவாகியும் வருகின்றார்கள். இவரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பாராட்டு தேவையா? சம்பளம் வாங்கி கொண்டுதானே வேலை பார்க்கின்றார் என்று சொல்லலாம். 

ஆனால் மிகப் பெரிய உண்மை என்னவெனில் கிம்பளம் வாங்காமல் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாய் நேர்மையாய் வேலை பார்த்து வருவதுதான் அவரின் நேர்மைக்கு அடையாளம். ஊடகங்கள் அவரது சாதனைகளை அன்றாடம் விளக்க வேண்டும். மூன்றாவது பக்கத்தில் ஒரு ஓரத்தில் அவரது செய்தி வெளி வருகின்றது. 

சினிமாவில் ஆண்ட்டி - கரப்ஷன் போர்ஸ் என்ற இயக்கத்தை கதாநாயகன் செய்வார். மற்றொரு படத்தினில் ஒரு நாள் முதலமைச்சர் அதிரடியாய் களமிறங்கி ஊழல்வாதிகளை ஆட்டம் காணச் செய்வார். அதற்கெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்யும் நம்மூர் ரசிகர்கள் ஒரு உண்மையான, நேர்மையான அதிகாரி பணியாற்றும் போது அவர்களுக்கு ஆதரவாய் என்ன செய்கின்றார்கள்??? உங்களுக்கு தொடங்கப்பட்டுள்ள ஆதரவு இயக்கத்தில் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பதைத்தான் வியாபாரமாய் ஒரு சிலர் செய்கின்றார்கள்

அந்த ஆண்ட்டி - கரப்ஷன் போர்ஸ் கருத்தை கொண்ட படத்திற்கு எத்தனை ரசிகர்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்கி இருப்பார்கள்.? எத்தனை ஊழல் செய்தவர்கள் அந்த ஒரு நாள் முதலமைச்சர் படத்தை குழந்தைகளோடு கைதட்டி படம் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு எங்காவது உறுத்தியிருக்குமா? என்றால் எதுவும் கிடையாது. சினிமா வேறு நிச வாழ்க்கை வேறு என்பதை நன்கு தெரிந்தவர்கள். 

அப்படி நிச வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ உருவாகும் போது எத்தனை பேர் அதனை ஏற்றுக் கொள்வார்கள்? அப்படி ஏற்று  கொள்ளாததன் வெளிப்பாடுதான் உ.சகாயம் அவர்களின் செயல்பாடுகள் எப்போதுமே மூன்றாம் பக்கத்தில் வருவதற்கு காரணம். முறையான உரிமம் வாங்காத கிரானைட் குவாரிக்கு யார் முறையாக தார்ச் சாலை போட்டுக் கொடுத்தது என்று கேட்டதாக செய்திகள் வெளி வந்தது!  அவ்வளவுதான், அதோடு சரி, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? என்று எந்த பத்திரிக்கையாவது கேள்விக் கணை எழுப்பியதா? தகவல்கள் இல்லை. ஒரு கை தட்டினால் ஓசை வராது. ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மட்டும் உழைத்தால் போதுமா? நியாயம் கிடைத்து விடுமா? அனைத்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் இதைப் போன்ற நடவடிக்கையில் எப்போது துணிந்து இறங்குவார்கள்? வெறும் கேள்விக் குறிகள் மட்டுமே நமக்கு விடையாக வரும்! 


இப்போது மதுரையில் சகாயம் ஆதரவு இயக்கம் என்ற ஒன்று புதிதாய் தொடங்கப் பட்டிருக்கின்றது. வாழ்த்துக்கள். ஆனால் திரு. சகாயம் அவர்களே, உங்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் அதிமேதாவி கிடையாது. ஆனால் உங்களை பாராட்டும், ஆதரவு தெரிவிக்கும் எத்தனை பேர், உண்மையான தொண்டர்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

உங்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களை நீங்கள் அவ்வப்போது கவனிக்க வேண்டிய சூழலில் நீங்கள் இருக்கின்றீர்கள். ஒரு சிலர் அரசியல் கட்சிகளின் உளவாளிகளாகவும் இருப்பார்கள். இதுவே நாளை உங்களுக்கு பெரிய தலைவலியாய் வந்து முடியும்! கவனம் தேவை. 

உங்களுக்கு ஆதரவு அளிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து ஓட்டுனர் உரிமம் வாங்கி இருப்பார்கள்? எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து சாதி சான்றிதழ் வாங்கி இருப்பார்கள். எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து கல்வித் தகுதியை பெற்றிருப்பார்கள். அப்படி இல்லாத ஒரே ஒரு நபர் உங்களுக்கு ஆதரவாய் இருந்தாலும் அது உங்களுக்கு மிகப் பெரிய வெற்றியே. 


சமீபத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது வாகனத்தில் சகாயம் ஆதரவு இயக்கத்தில் தான் ஒரு உறுப்பினர் என்று சொன்னார். அதற்கு அவருக்கு தகுதி இருக்கின்றதா? என்று கேட்டால் எதுவும் இல்லை. காரணம் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை, ஓட்டுனருக்கான சீருடை இல்லை, வாகனத்தில் மீட்டரும் இல்லை. எதற்கு இந்த பந்தா என்று கேட்டால்? அப்பதான்யா டிராபிக் போலிஸ்காரங்கிட்டே இருந்து தப்பிக்க முடியும்? எல்லாம் ஒரு சேப்டிக்காகத்தான் என்று ஒரு போடு போட்டார். நான் வாயடைத்து போனேன். 

தங்களது குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு தனக்கு ஒரு அடையாளம் தேவை என்பதை இம்மாதிரியான உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்கள். உங்களது பெயருக்கு களங்கம் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

நாட்டை வளப் படுத்த வேண்டும் என்று உண்மையான எண்ணத்தோடு இருப்பவர்களை அணி சேருங்கள். தலைவா, நீ அது செஞ்சிடு, இது செஞ்சிடு என்று குரல் கொடுத்து விட்டு உங்களை உசுப்பேத்தும் சுயநலக் கூட்டம் நம்மை சுற்றி வருகின்றது, கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மீது எந்த நேரத்தில் பழி போடலாம், எப்படி போடலாம் என்று சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிகுந்த கவனம் தேவை! 

இது ஒரு உண்மையான குடிமகனின் அன்பான வேண்டுகோள்.! இது எச்சரிக்கை கடிதம் அல்ல, போலி தொண்டர்களிடம் இருந்தும், உளவாளிகளிடம் இருந்தும் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்ற அன்பான வேண்டுகோள்.  உங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.