பங்காளிங்க..

Monday, August 21, 2017

மாட்டுக்கு கொடுத்த மரியாதைய விவசாயிக்கும் கொடுங்கப்பா!

வணக்கம் இணையதள மற்றும் வலைப்பூ நண்பர்களே! 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்களோடு நானும் இணைகின்றேன். காலச்சக்கிரத்தின் கோலம், சில பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி தவித்து தற்போது மீண்டும் இச்சமுதாயத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ளேன். 

எத்தனையோ நாட்கள் எனது வலைப்பூவை திறந்து பார்த்து, ச்சே! எப்படியெல்லாமோ காலம் கடந்து விட்டதே என்று எனக்குள் நானே சபித்து கொள்வேன். 

இன்று சமுதாயம், நாடு மற்றும் சட்டம், நீதி அனைத்துமே செத்துப் போய்தான் இருக்கிறது. தமிழ் நாட்டை ஆளுவது யார், மாநிலமா? இல்லை மத்தியமா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மக்களுக்குள் உருவாகித்தான் இருக்கிறது. 

மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் இழப்பு எவ்வளவு மோசமானது என்பதை மக்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார்கள். அவரின் ஆளுமையில் அவரை திமிரு பிடித்தவர், ஆணவம் கொண்டவர், தலைக்கனம்  கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்தவர்கள் இன்று அந்த அம்மா இருந்திருந்தா இவனுங்க இப்படி ஆட்டம் போடுவானுங்களா, வாயைத்திறந்து பேசுவானுங்களா என்று வாய் விட்டே அறைகூவல் விடுத்து கொண்டிருக்கின்றார்கள். தொண்டனுக்கு இன்றும் தெரியவில்லை, யார் உண்மையான அம்மா விசுவாசி என்று, யாரை தலைமையாக ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை,

எதிர்க்கட்சியான திமுகவும் இன்று தலைமை இல்லாமல் சீரழிந்து போயிதான் இருக்கிறது. எத்தனையோ புரட்சிகள், போராட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், இலவு காத்த கிளி போல இங்குமங்கும் போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். 

நாடே நாசமாய் போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில் பிக் பாஸ் என்ற டீவி தொடர் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது, வெட்கக்கேடான விஷயம்! ஊடகங்கள் எல்லாமே வெட்கி தலைகுனிய வேண்டிய நேரம் இது, அஜித்தின் திரைப்படமும், விஜயின் திரைப்படமும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது. 

2ஜி, காமன்வெல்த் போட்டி ஊழல், நிலக்கரி ஊழல், கிரானைட் ஊழல், விஜய் மல்லையா ஊழல், கண்டெய்னர் லாரி கோடிக்கணக்கான பணம் விசாரணைகள் என்னவானது?   

மக்களை மறக்கடிக்க கொண்டு வந்ததே, 500 ரூவாய், 1000 ரூபாய் பண மாற்றம், ஜிஎஸ்டி ஆகியவையே, சாமானியன் இன்று வரை சாமானியனாகவே இருக்கின்றான், நாட்டை ஆக்கப்பூர்வமான கொண்டு செல்ல ஒருவனும் சிந்திக்கவே இல்லை! அதிமுகவில் உள்ள இரு அணிகள் இணையுமா? என்ற கேள்விகளை தினமும் டிஆர்பி க்காக விசாரிக்கும் ஊடகங்கள், வெட்கக்கேடான விஷயங்கள்! 

அம்மாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக 4 அணிகளாக உருவெடுத்திருப்பது, அந்த அம்மாவின் மரணத்தை வேண்டியிருப்பார்களோ என்ற சந்தேகத்தை மக்களிடம் கிளப்பி வருகிறது. 

பணம், பதவி மோகம் இல்லாத ஒரு தலைவனை இனி எப்போது நாம் காணப் போகின்றோம். ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் கேவலங்கள் எப்போது நாட்டை விட்டு செல்ல போகின்றது?

கதிராமமங்கலம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எங்கே போனது? நாடு அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக வோ ஆட்சியை பிடிக்கும் வரை அவர்களை கைது செய்வேன், இவர்களை கைது செய்வேன் என்று ஊருக்கு ஊர் போய் பிச்சை எடுத்து பதவி பெற்றார்கள். இன்று பலகோடி கொள்ளையடித்த விஜய் மல்லையா கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருக்கின்றான். அவனை கைது செய்ய வக்கில்லாமல், அலைந்து கொண்டிருக்கிறது. கார்ப்பொரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக மத்திய  அரசும்,மத்திய அரசின் கைக்கூலியாக மாநில அரசும் இழுபறியில் இருக்கிறது. 

திருநெல்வேலி நகரத்தில் பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளை தண்ணீர் எடுக்க தாரை வார்த்து கொண்டிருக்கும் அன்றைய தமிழக அரசு, இன்று அதற்கு எதிராக போராட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. 

மீத்தேன் வாயுதிட்டத்தை அறிமுக படுத்தி அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட இயக்கங்கள்தான் இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துகிறது. மக்களை இன்னமும் கேனப்பயல் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்களே! என்ற கோபம் தலைக்கேறுகிறது. 

எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்க, இங்கே நாற்காலிக்கு சண்டை போடும் நாதாரிகளை நினைத்தால் என்னவென்று சொல்ல? 

அம்மா இறந்த சந்தேகங்கள் ஆயிரம் இருக்க? ஏன் இளைஞர்கள் போராட்டம் செய்ய வில்லை என்று தெரியவில்லை! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் குரல் கொடுத்த இளைஞர்கள் ஏன் இந்த அம்மாவின் மரணத்தில் விசாரணைக்கு குரல் கொடுக்க வில்லை! 

அந்த அம்மா ஊழல் செய்ததாக இருக்கட்டும், ஆனால் நாட்டு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் எதுவும் குறைவில்லையே! போகும் போது எதுவுமே கொண்டு போகப்போவதில்லை என்பதற்கு பணம் சேர்த்த முதலைகள் தெரிந்து கொள்ள வேண்டுமே! 

இது சாதாரண மரணம் அல்ல! கோடி ரூபாய் கையில்  பிணமாகத்தான் நம்மை விட்டு பிரிந்தார். மரண விளிம்பில் இருந்த அவரோடு யாருமே பேசவில்லை! யாரையுமே பேச விடவில்லை, ஒரு செய்தியின் உண்மை நிலை தெரியவில்லையெனில் ஆயிரமாயிரம் பொய் செய்திகள் பரவத்தான்  செய்யும்! அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உண்மைநிலை மக்களுக்கு தெரியவேண்டும்! 

தெரியுமா? இளைஞர்கள் இனியாவது விழித்து கொள்வார்களா? ஏதாவது ஒரு ஐடி நிறுவனம் விவசாயத்திற்கு, கதிராமமங்கலத்திற்கு, நெடுவாசலுக்கு குரல் கொடுக்குமா? அப்படி கொடுக்கும் போது அனைத்து ஐடி நிறுவனங்களும், இளைஞர்களும், இளைஞகளும் இணைவார்கள். 

சமுதாய பிரச்சனைகளை பேசும் ஊடகங்கள் என்று வெளிவரும் என்று உங்களைப்போலவே நானும் காத்திருக்கின்றேன். தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரன் வீரமரணம் செய்தி ஏழாவது பக்கத்தில் ஒரு குட்டி பெட்டி செய்தியாக வெளிவந்திருக்கிறது, முதல் பக்கத்தில் விவேகம் படத்தின் டீசரை 1 லட்சம் பேர் பார்த்தார்கள் என்று வெளிவந்திருப்பதே கேவலத்திற்குரிய விஷயமே!   

விடைகளே தெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் நமக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறது! 

எப்போது கிடைக்கும் விடைகள்! ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கிடைத்த விடைகள் கூட மனிதனுக்கு நம் வாழ்வின் உயிர் விவசாயத்திற்கு கிடைக்காதது வேதனையளிக்கிறது...

விவசாயத்தை காப்போம் என்று வாட்சப்பில் லோகோ வைத்து விட்டால் நாம் போராளிகள் என்று அர்த்தம் கிடையாது. விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். சாமானியன் ஒருவன் வீட்டிற்காக, திருமணத்திற்காக, கல்விக்காக வாங்கிய கடனுக்கு, அவனது வீட்டை ஜப்தி செய்யும் வங்கிகள், கல்வி சான்றிதழை பறிமுதல் செய்யும் வங்கிகள், நகைகளை ஏலத்தில் விற்கும் வங்கிகள், விஜய் மல்லையாவின் கால்களை கழுவி விட்டது எப்படி? 

எப்படி அவனை வெளிநாட்டிற்கு தப்ப வைத்தார்கள்? எப்படி இன்று வரை தலைமறைவாக இருக்கின்றான்? மக்கள் சிந்திக்க வேண்டும்? 




No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...